*களையிழந்த கருணாபுரம்… அதிகார வர்க்கத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்கள்…

இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்க காத்திருக்கிறது இந்த கள்ளச்சாராயம் ? சாராய வியாபாரிகளை கைக்குள் வைத்துள்ள ஆளுங்கட்சியினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது கட்சி மேலிடம்? விடை தெரியாத கேள்விகள் பலப்பல…

இரண்டு நாட்கள் முன்பு வரை மற்ற பகுதிகளை போல் இயல்பாக இருந்த கள்ளக்குறிச்சி கருணாபுரம் இன்று மரண ஓலங்களாலும், கண்ணீராலும் தத்தளிக்கிறது.

துக்க வீட்டிற்கு சென்றவர்கள் சாராயம் அருந்தியதில் தான் தொடங்கியது இந்த துயர சம்பவத்தின் அடித்தளம். முதலில் கள்ளச்சாராயம் இல்லை என்று மறுத்த மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பால் அதை அதிக அளவில் அருந்தினர் பலர். இதை அடுத்து ஒருவர் பின் ஒருவராக தலைவலி, வாந்தி, மயக்கம் என பாதிக்கப்பட்ட பிறகு சாராயத்தின் தீவிரம் தெரிய வந்தது.

உடனடியாக கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி மருத்துவமனைகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி 42 பேர் உயிரிழந்தனர். பலருக்கு கண்பார்வை பறிபோயுள்ளது. பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக தலா 10 லட்ச ரூபாயை அறிவித்துள்ளது தமிழக அரசு. இது மிக கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு எதற்காக இழப்பீடு? அதற்கு பதிலாக அவர்களது குடும்பங்களுக்கு எந்த வகையிலாவது அரசு உதவலாம். அதை விடுத்து இழப்பீடு தருவது என்பது சாராயத்தை குடிக்கத்தான் ஊக்குவிக்குமே தவிர அழிப்பதற்கு அல்ல. கடந்த ஆண்டு செங்கல்பட்டு மற்றும் மரக்காணம் பகுதிகளில் சாராய உயிரிழப்புகள் ஏற்பட்டபோது அரசு இதேபோல் நிவாரணம் அறிவித்தது. அப்போதும் இழப்பீடு பெருமளவில் விமர்சனத்திற்குள்ளானது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் நிலையில் ஆளும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டு விடக்கூடாது என கருதியே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ள முக்கிய சாராய வியாபாரி ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவர் என ஆதாரத்துடன் தெரியவந்துள்ள நிலையில் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது கட்சி மேலிடம்? காவல்துறையினருக்கு தெரியாமல் இந்த அளவிற்கு சாராயம் காய்ச்சுவது துளியும் நடைபெறாமல் இருக்க முடியாது. காவல்துறையினரை பணியிடை நீக்கம் மற்றும் மாற்றம் செய்தால் மட்டும் போதாது. காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்கு யார் கொடுத்த அழுத்தம் காரணம் என்ற தகவலையும் அரசு அறிவித்த ஒருநபர் விசாரணை ஆணையம் வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். அது வெறும் கண்துடைப்பு ஆணையமாக இல்லாமல் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க ஆலோசனைகளையும் தவறு செய்தவர்கள் யார் யார் என்பதனை தெளிவான ஆதாரங்களுடன் இருக்க வேண்டும் .

இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ் நாளிதழ் ஒன்றில் கல்வராயன் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவது தொடர்பாக செய்தி வந்துள்ளது. இதன் பிறகாவது நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரிழப்புகளை தவிர்த்து இருக்கலாம்.

இனியாவது ஆளுங்கட்சி நாளிதழ், எதிர்க்கட்சி நாளிதழ் என்று பாரபட்சம் பாராமல் தகவல்களை மட்டும் பார்த்து அதன் உண்மைத்தன்மை குறித்து உடனடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற உயர் பலிகள் வேறு எதிலும் நிகழாமல் தவிர்க்க முடியும்.

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்