ஓசூரில் 2000 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆண்டிற்கு 3 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் கட்டப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் அறிவித்த சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ள இடமான பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 20 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன . அறிவித்த நாள் முதலே இன்றளவும் அப்பகுதி மக்கள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய மாநில அரசுகள் இணைந்து உருவாக்கும் இந்த விமான நிலையத்திற்கான பணிகள் அடுத்த கட்டத்திற்கு செல்லாமலேயே உள்ளது.
இந்த நிலையில் ஓசூரில் புதிதாக விமான நிலையம் அமைய உள்ளதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அறிவிப்பு மட்டுமே வெளியாகி உள்ள நிலையில் இடம் தேர்வு, நிலம் கையகப்படுத்துவது என அடுத்தடுத்த அறிவிப்புகள் வரும் மாதங்களில் வெளிவரும். அதிக தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த மாவட்டமாக ஓசூர் இருந்தாலும் , ஓசூரைச் சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. அங்கு வசிப்பவர்களே ஓசூர் தொழில் நிறுவனங்களிலும் பணி புரிகிறார்கள்.
விமான நிலைய அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை , இந்திய அரசு மற்றும் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு இடையேயான ஒப்பந்தத்தின் படி 2033 ஆம் ஆண்டு வரை பெங்களூருவில் இருந்து 150 கிலோ மீட்டர் சுற்றளவில் புதிய விமான நிலையங்கள் அமைக்க முடியாது என்றும் , ஓசூரில் உள்ளது TAAL என்ற தனியாருக்குச் சொந்தமான விமான நிலையம் என்றும் இதனாலே உதான் திட்டத்தின் கீழ் அதனை மேம்படுத்த முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தும் ஓசூர் விமான நிலையத்தை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளாமல் வெறும் விளம்பரத்திற்காக ஓசூரில் பன்னாட்டு விமான நிலையும் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதாக கூறியுள்ளார்.
இத்தகைய சூழலில் 2000 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்க வேண்டும் எனில் எத்தனை கிராமங்களை சேர்ந்த நிலங்கள் கையகப்படுத்தப்படும் என ஓசூர் சுற்றுவட்டார மக்கள் அச்சத்தில் உள்ளனர் . நிலம் கையகப்படுத்துதல் தொடங்கியதும் மக்கள் வேறு இடங்களுக்கு செல்ல வலியுறுத்தப்படுவர். வருவாய்த் துறையை சேர்ந்த நில எடுப்பு அதிகாரிகளை வைத்து நிலம் கையகப்படுத்தப்படும். இத்தகைய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் அரசு இதனை எப்படி கையாள போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். விமான நிலையம் நல்லது தான் என்ற போதும் பரந்ததூரைப் போன்று விளைநிலங்களை அழித்து விமான நிலையம் என்பதை ஏற்றுக் கொள்ள மக்கள் யாரும் தயாராக இல்லை.
அவசரகதியில் இதற்கான பணிகளை மேற்கொள்ளாமல் மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து அதன் பிறகு விமான நிலையம் அமைப்பது குறித்த தெளிவான விவரங்களை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.