ஏற்காடு கோடை விழா இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் அண்ணா பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அலங்கார மலர்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
ஏற்காட்டில் நடந்த 22ஆம் தேதி தொடங்கிய கோடை விழா இன்று 30ம் தேதி வரை நடைபெறுகிறது. சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக தோட்டக்கலைத்துறை சார்பில் ஐந்தரை லட்சம் மலர்களைக் கொண்டு பல்வேறு உருவங்களும், 30,000 பூந்தொட்டிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பிரம்மாண்ட காற்றாலை, பவளப்பாறைகள், நண்டு, ஆக்டோபஸ், நட்சத்திர மீன், கடல்குதிரை, கார்ட்டூன் கதாபாத்திரங்கள் என மலர்க் கண்காட்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன.
சுற்றுலாப் பயணிகளின் வேண்டுகோளை ஏற்று அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர் கண்காட்சி மட்டும் இன்றுவரை நீட்டிக்கப்பட்டிருந்தது. மலர் கண்காட்சி தொடங்கப்பட்டு ஒருவாரம் ஆவதால் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள வடிவமைப்புகளில் ஒரு சில இடங்களில் மலர்கள் வாடிய நிலையில் காணப்பட்டன. இதனை புதுப்பிக்க வேண்டுமென விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று தோட்டக்கலைத் துறை சார்பில் வாடிய பூக்கள் அகற்றப்பட்டு புதிய பூக்கள் வைக்கப்பட்டன. இதனால் அந்த உருவங்கள் பொதுப்பொலிவுடன் காட்சி தருகின்றன.