உருவானது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி – இன்று கனமழை எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காலைக்குள் வடகிழக்கு நோக்கி நகர்ந்து மத்திய வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் அதை தொடர்ந்து வடகிழக்கு நோக்கி நகர்ந்து தீவிரமடையும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை 23ஆம் தேதி முதல் மழை குறைந்து மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்.
தொடர் மழையால் சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கன மழை பெய்துள்ளது. ஏற்காட்டில் கோடை விழா தொடங்கிய நிலையில் மழையை பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். சங்ககிரி சுற்றுவட்டாரத்தில் காலை முதல் வெயில் கொளுத்திய நிலையில் மாலையில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இரண்டு நாட்களில் மட்டும் சங்ககிரியில் 108 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .
ஜருகு மலைத் தொடரில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த மலையை ஒட்டிய கிராமங்களில் கால்நடைகளும், மக்களின் உடைமைகளும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. காட்டாற்று வெள்ளத்தால் தாசநாயக்கன்பட்டி முதல் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் வரையிலான சேலம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் வாகனப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது . மாவட்ட நிர்வாகம் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் தண்ணீர் தேங்குவதை தடுத்து இருக்கலாம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் இன்றும் மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் மற்றும் மின்சாரம் தொடர்பான அவசர உதவிக்கு 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என சேலம் மின் பகிர்மான வட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்