இந்தியாவில் விற்பனை செய்யப்படும் உப்பு மற்றும் சர்க்கரைகளில் மைக்ரோ பிளாஸ்டிக் கலப்படம் நிகழ்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உப்பு மற்றும் சர்க்கரை இல்லாமல் நமது எந்த உணவும் இருக்காது. சமையலில் அன்றாடம் பயன்படுத்தப்படும் இந்த இரண்டிலும் கலப்படம் நிகழ்ந்துள்ளது தனியார் சுற்றுச்சூழல் ஆய்வு நிறுவனம் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது. இதற்காக பத்து வகையான நிறுவனங்களின் உப்புக்களும், ஐந்து வகையான சர்க்கரைகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இவை அனைத்திலுமே மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருந்துள்ளன. இதன் அளவானது 0.1 மில்லி மீட்டர் முதல் 5 மில்லி மீட்டர் வரை இருக்கிறது.
பிளாஸ்டிக் குப்பைகளின் முறிவிலோ அல்லது தயாரிக்கும் பொருட்களில் சேர்க்க வேண்டும் என்பதற்காகவோ மைக்ரோ பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இவை நமது உடலில் நுழையும் போது உடலின் நாளமில்லா சுரப்பிகளை சீர்குலைத்து நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். குடல் பாதிப்பு ஏற்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி மேலும் பல நோய்களின் வருகைக்கு காரணமாக மாறக்கூடியது. பெண்களுக்கு கருவுறுதல் பிரச்சனைகள் உள்ளிட்ட அபாயங்களையும் ஏற்படுத்தும் தன்மை உடையது மைக்ரோ பிளாஸ்டிக்.
அண்மைக்காலமாக மருத்துவமனைகளை தேடிச் செல்லும் மக்களின் எண்ணிக்கை பரவலாக அதிகரித்து வருகிறது. உணவே மருந்து என்பது மாறி மருந்தேஉணவாகிப் போயுள்ளது. எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம் என்று ஆனதால் எதை சாப்பிட வேண்டும் என்பதே கேள்விக்குறியாகியுள்ளது.