கள்ளச்சாராய சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்கிற குரல் மீண்டும் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது.
ஒரு காலத்தில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்தது 1971 ஆம் ஆண்டு அது நீக்கப்பட்டு மீண்டும் 73 -74 ஆம் ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்டது. பின்னர் 1981 ஆம் ஆண்டு மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ஆண்ட, ஆளும் திராவிட கட்சிகளின் சாதனைகளில் ஒன்று மதுக்கடைகள் திறப்பு.
ஒரே நாளில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர் . பீகார், குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் உள்ளது. அதே நேரம் அந்த மாநிலங்களில் போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளது.
பல ஆண்டுகளாக மது அருந்தி வருபவர்கள் உடனடியாக அந்தப் பழக்கத்தை கைவிடுவது சாத்தியம் இல்லை. பதற்றம், கை, கால் உதறுதல் , சோர்வு என பல பிரச்சனைகள் ஆரம்பத்தில் ஏற்படலாம் எனக் கூறும் மருத்துவர்கள் அவர்கள் மனரீதியான சவால்களையும் சந்திக்க நேரிடும் என்கிறார்கள்.
அந்த வகையில் மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு முன் மறுவாழ்வு மையங்களை அதிகரித்து அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது முக்கியம். கடந்த ஆண்டு இதேபோல சம்பவம் ஏற்பட்டபோது இனி இது போன்று நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது . இப்போதும் இதே வேண்டுகோள் தொடர்கிறது.
தமிழகத்தின் மொத்த வருவாயில் டாஸ்மாக்கின் பங்கு மிக முக்கியமானது. பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படுமானால் மாநில அரசுக்கு பெரும் நிதிச் சுமை ஏற்படும். வருவாய்க்கான மாற்று வழிகளை அரசு கண்டறிந்த பின் இந்த முடிவை எடுக்க வேண்டும். அனைத்திற்கும் மேலாக மதுப் பிரியர்கள் தாமாக மதுப்பழக்கத்தை கைவிட முன்வந்தால் மட்டுமே பூரண மதுவிலக்கினை நோக்கி தமிழகம் நகரும்.