தென்னகத்து சார்லி சாப்ளின் சந்திரபாபு பிறந்த தினம் இன்று

தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகவும் சிறந்த பாடகராகவும் விளங்கியவர்
சந்திரபாபு. தூத்துக்குடியில் கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தவர். ஜோசப்பிச்சை என்னும் பெயரிடப்பட்ட இவரைப் பாபு என்று செல்லமாக அழைத்து வந்தனர்.

இவர், சந்திரகுல வம்சத்தில் பிறந்திருந்த காரணத்தால் தமது பெயரைப் பின்னாளில் சந்திரபாபு என மாற்றிக் கொண்டார்.

சந்திரபாபுவின் தந்தை ஜெ.பி.ரோட்ரிக்ஸ் ஒரு விடுதலைப் போராட்ட வீரர். சுதந்திர வீரன் என்ற பத்திரிகையை நடத்தி வந்தார். அன்றைய ஆங்கிலேய அரசு இவரது சொத்துகளைப் பறிமுதல் செய்து, சத்தியாக்கிரக இயக்கத்தில் கலந்து கொண்டமைக்காக 1929 இல் அவரைக் கைது செய்தது. அவர் விடுதலையானவுடன் அவரையும் அவரது குடும்பத்தினரையும் இலங்கைக்கு நாடு கடத்தியது. அங்கு அவர் ஒரு தமிழ்ப் பத்திரிகையில் பணியாற்றினார்.

சந்திரபாபு கொழும்பில் புனித யோசேப்பு கல்லூரியிலும் பின்னர்க் கொழும்பு அக்குவைனாசு கல்லூரியிலும் கல்வி கற்றார். சந்திரபாபுவின் குடும்பம் 1943-ஆம் ஆண்டில் இந்தியா திரும்பி சென்னை திருவல்லிக்கேணிக்கு குடியேறியது.

சிறு வயதிலேயே பாடும் திறமை பெற்றிருந்த சந்திரபாபு, ஆங்கிலேயரின் நவநாகரிகப் போக்கினால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தனது 16-ஆம் வயதில் திரையுலகில் நுழைய முயற்சிகளை மேற்கொண்டார்.
ஒரு படத்தளத்தின் உள்ளே சென்று வாய்ப்புத் தேட அனுமதிக்கப்படாததால், தற்கொலைக்கும் முயன்றவர். நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்ட சந்திரபாபு, நீதிபதியின் முன்னால் ஒரு தீக்குச்சி கொண்டு தனது கையைச் சுட்டுக் கொண்டு கூறினார்: “உங்களுக்கு நான் சுட்டுக் கொண்டதுதான் தெரியும்; என் காயத்தை உங்களால் உணர முடியாது. அதுபோலத்தான் என் துயரும்.”

நகைச்சுவை நடிகரான சந்திரபாபுவின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இல்லை. அவர் மணந்த பெண், தான் வேறொருவரை விரும்புவதாகக் கூறியதால், அந்தப் பெண்ணின் விருப்பப்படியே அவர் விரும்பும் நபருடன் மகிழ்ச்சியாக வாழ, அவரை மரியாதையுடன் அனுப்பி வைத்தவர் சந்திரபாபு. (இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்தே “அந்த 7 நாட்கள்” படத்தின் திரைக்கதையை அமைத்ததாக பின்னாளில் நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ் தெரிவித்தார்.)

சர்ச்சைகளும் சக நடிகர்களுடனான சச்சரவுகளும் சந்திரபாபுவைச் சூழ்ந்தே இருந்தன.
கவலை இல்லாத மனிதன் மற்றும் குமார ராஜா என்னும் இரு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்ததும் இனி நகைச்சுவை நடிகராகப் போவதில்லை என்று அறிவித்தார். ஆயினும், அவை இரண்டுமே வர்த்தக ரீதியாக வெற்றி பெறாததால், மீண்டும் போலீஸ்காரன் மகள் போன்ற திரைப்படங்களில் நகைச்சுவை வேடம் ஏற்கத் தொடங்கினார்.

அவர் தாமே கதாநாயகனாக நடித்து, தயாரித்து இயக்கிய தட்டுங்கள் திறக்கப்படும் என்னும் திரைப்படத்தின் படுதோல்வியுடன் அவரது திரை வாழ்க்கை அநேகமாக இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது என்றே கூறலாம். 1960 -ஆம் ஆண்டுகளில் நாகேஷ் பின்னர் சோ ஆகியோர் நகைச்சுவை நடிகர்களாக முன்னேறத் தொடங்கியதும் சந்திரபாபுவின் திரையுலக வாழ்வில் தேக்கம் உண்டானது. மேலும், அச்சமயம் அவர் மீளாக் குடிக்கும், பெத்தடின் போதைக்கும் அடிமையாகி இருந்தார். இருப்பினும், அடிமைப்பெண், ராஜா, கண்ணன் என் காதலன் (இதில் சோவும் உடன் நடித்தார்) போன்ற ஒரு சில படங்களிலும் நடித்தார்.

காலத்தின் சுழற்சியில் மறைந்து போகாத புகழுக்கு சொந்தக்காரர் நமது தென்னகத்து சார்லி சாப்ளின்

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்