சேலம் மாவட்டத்தில் 3.35 லட்சம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் வழங்கும் திட்டத்திற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன
காற்று மாசை குறைப்பதற்காக மத்திய அரசால் இயற்கை எரிவாயு விநியோகத் திட்டப்பணி தொடங்கப்பட்டது. இதில் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் பயன்பாட்டிற்கு இயற்கை எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது.
மின்சார கட்டணத்தை போன்றே பயன்படுத்திய பின் கட்டணம் செலுத்தும் முறையாதலால் மக்களிடையே மிகுந்த வரவேற்பு இதற்கு கிடைத்துள்ளது.
இத்திட்டத்திற்கு சேலம் மாவட்டத்தில் 1300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3.35 லட்சம் வீடுகளுக்கு மற்றும் 158 பெட்ரோல் பங்குகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கென சேலம் இரும்பாலையில் இயற்கை எரிவாயு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகிக்கப்படுகிறது. சர்க்கார் கொல்லப்பட்டி, கோட்ட கவுண்டம்பட்டி, பாகல் பட்டி பூமி நாயக்கன்பட்டி, சங்கர் நகர் உள்ளிட்ட இடங்களில் தற்போது 330 வீடுகளில் திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இணைப்புகள் வழங்கப்பட்ட மொத்தமுள்ள 2600 வீடுகளுக்கு விரைவில் எரிவாயு விநியோகம் செய்யப்பட உள்ளது.
இது தவிர திருவாக் கவுண்டனூரில் 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு வழங்குவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ள இந்திய ஆயில் நிறுவனம், சாலைகளில் பள்ளம் தோண்டி குழாய் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்தத் திட்டம் முழு செயல்பாட்டிற்கு வரும்போது காற்று மாசு பெருமளவில் குறையும்.