செயற்கை நுண்ணறிவின் அடுத்த கட்டம் – பகுத்தறிவுடன் உருவாகும் புதிய AI வளர்ச்சியின் அடையாளமா? அழிவின் ஆரம்பமா?
சமூக வலைத்தளங்கள் முதல் தொழில்துறை வரை AI எனப்படும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தாத துறைகளே இன்று இல்லை எனும் அளவிற்கு அனைத்திலும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மேலோங்கியுள்ளது. மனித வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறும் நாளை நோக்கி இந்த தொழில்நுட்பம் முன்னேறி வருகிறது.
அந்த வகையில் Chat GPT ஐ உருவாக்கிய Open AI நிறுவனம் அடுத்த கட்டமாக ஸ்ட்ராபெரி என்ற பெயரில் பகுத்தறிவு கொண்ட AI தொழில் நுட்பத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளதன. ஏற்கனவே AI தொழில்நுட்பம் குறித்து பல தரப்பிலும் அச்சம் தெரிவிக்கப்பட்டு வருவதால் இந்த ஸ்ட்ராபெரி கண்டுபிடிப்பு மிகவும் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் AI மாடல்களுக்கு தன்னிச்சையாக விஷயங்களை புரிந்து கொள்ளுதல், Logical Reasoning, எதையும் ஆராய்ந்து செயல்படுவது, பிரச்சனைகளை தீர்ப்பது உள்ளிட்ட பகுத்தறியும் தன்மைகளை விஞ்ஞானிகள் கற்றுத்தந்து வருகின்றனர். சுருக்கமாக சொல்வதெனில் எந்திரன் திரைப்படத்தில் இயந்திர மனிதனுக்கு மனித உணர்வுகளையும் பகுத்தறிவையும் கற்றுத் தந்ததுதான் இப்போது நிஜத்தில் அரங்கேற உள்ளது .
கூகுள் , மெட்டா, மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் இந்த முயற்சியில் பின்தங்கியுள்ள நிலையில் Open AI நிறுவனம் உருவாக்கி வரும் இந்த புதிய தொழில்நுட்பம் வரும் காலங்களில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கவும், சிக்கலான மென்பொருட்களை உருவாக்கவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இது குறித்த உறுதியான அறிவிப்பை Open AI தெரிவிக்கவில்லை என்ற போதிலும் அண்மையில் Q* என்ற புதிய திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட AI மூலம் சிக்கலான கணிதம் மற்றும் அறிவியல் கேள்விகளுக்கு எளிதில் விடை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த Q* தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டமாக ஸ்ட்ராபெரி இருக்க வாய்ப்புள்ளது.
தொழில்நுட்பம் வளர்ந்து வருவது நல்லது தான். ஆனால் மனித சக்திக்கு எதிரானதாக அது மாறும் போது எந்த தொழில் நுட்பமும் அதன் நம்பகத்தன்மையை இழந்து நாளடைவில் மனித சமூகத்திற்கே அபாயகரமானதாகிவிடும் என்பதை மறந்துவிடக்கூடாது.