ஏழு மலைகள் சூழ கம்பீரமாக எழுந்தருளியுள்ள திருப்பதி ஏழுமலையானை யாரும் அவசரப்படுத்தாத வகையில் நிதானமாக தரிசிக்க வேண்டுமா அதற்கும் வழி இருக்கிறது.
108 வைணவ திருத்தலங்களுள் முதன்மையான திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான, சில நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதுண்டு. ஒரு நாள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வோரும் உண்டு, பல மணி நேரம் காத்திருந்தும் சுவாமி தரிசனம் செய்யும் போது ஜருகண்டி என்ற ஒற்றை சொல்லை பயன்படுத்தி பக்தர்களை அவசரப்படுத்துவதால் கண்குளிர காணும் தரிசனம் கிடைக்காதா என ஏங்குவோர் பலர் உண்டு. அவர்களுக்கெல்லாம் தெரியாத ஒரு விஷயம் நீங்கள் ஏழுமலையானை யாரும் அவசரப்படுத்தாத வகையில் நிதானமாக பிரார்த்தனை செய்து விட்டு வரலாம், யாரும் உங்களை எதுவும் சொல்ல மாட்டார்கள் ஆனால் அதற்கு உங்களுக்கு அதிர்ஷ்டம் வேண்டும் .
திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் ஒவ்வொரு நாளும் நிறைந்து வேறு உண்டியல் மாற்றப்படுவது சாதாரண நிகழ்வு. இதில் தான் அந்த அதிர்ஷ்டம் ஒளிந்துள்ளது . சுவாமி தரிசனம் முடித்துவிட்டு வரும்போது உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்காக வரிசையில் நீங்கள் நின்று இருக்கிறீர்கள் எனில் உங்கள் முறை வரும்போது ஒருவேளை உண்டியல் நிரம்பி விட்டால் அங்குள்ள ஊழியர்கள் உங்களை உண்டியலில் பணத்தை போட அனுமதிக்க மாட்டார்கள். உண்டியலை சீல் வைத்து அதனை அப்புறப்படுத்தும் வேலளயில் அதன் அருகில் நிற்கும் முதல் இரண்டு பக்தர்களை தங்களுடன் அழைத்துச் செல்வர்.
நிரம்பிய உண்டியல் சீல் செய்யப்பட்டு அகற்றப்பட்டது. அப்போது நான் உடனிருந்தேன் என்று அந்த இரண்டு பக்தரும் சாட்சி கையெழுத்து போட வேண்டும் . இது சம்பிரதாயத்திற்காக தான். ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்படும் இந்த மரபினால் பயம் ஏதுவும் தேவையில்லை . சாட்சி கையெழுத்து போட்ட நபர்களுக்கான வெகுமதி தான் மீண்டும் ஒருமுறை ஏழுமலையான் தரிசனம். அதுவும் இலவசமாக, வெகு அருகில் பார்த்து மகிழும் வகையில் அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த தரிசனத்தின் போது ஜருகண்டி என்ற வார்த்தையை உங்களிடத்தில் யாரும் சொல்ல மாட்டார்கள்.
அடுத்த முறை திருப்பதி பயணத்தில் உண்டியலை பார்க்கும்போது இந்த விஷயத்தை மனதில் வையுங்கள். முடிந்தால் அந்த அதிர்ஷ்டக்கார பக்தர் நீங்களாக கூட இருக்கலாம்.