தமிழகம் முழுவதிலும் வெளிமாநில பதிவு எண் கொண்ட 547 ஆம்னி பேருந்துகள் நேற்று முதல் இயக்கப்படவில்லை. எதனால் இவை நிறுத்தப்பட்டுள்ளன? அதன் உரிமையாளர்களுக்கு அரசு விடுத்துள்ள எச்சரிக்கை என்ன?
தொலைதூர பயணங்களுக்கு அதிக கட்டணம் என்ற போதும் அரசு பேருந்தைக் காட்டிலும் தனியார் ஆம்னி பேருந்துகளை மக்கள் அதிக அளவில் நாடுவர். இதனால் கட்டணங்களும் அப் பேருந்துகளில் தாறுமாறாக இருக்கும். சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து தலைநகர் சென்னைக்கும் , அண்டை மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கும் பலவித ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன . இதில் தமிழ்நாட்டு பதிவு இல்லாத ஆம்னி பேருந்துகள் ஜூன் 16ஆம் தேதி முதல் இயங்க தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆம்னி பேருந்துகளில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றுச் செல்ல அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதனை முறையாக பயன்படுத்தாமல் சாதாரண பேருந்துகளை போல் பயணிகளை கையாள்வதாக போக்குவரத்து துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் முறைகேடாக பேருந்துகளை இயக்குவதால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
ஏற்கனவே வெளிமாநில பதிவு கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழக பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளாக மாற்ற வேண்டும் என்று கூறப்படும் அது பின்பற்றப்படவில்லை. இறையடுத்தே 547 பேருந்துகளின் இயக்கம் நேற்று முதல் நிறுத்தப்பட்டது.
தடையை மீறினால் பேருந்து பறிமுதல் செய்யப்படுவதோடு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறி இந்தப் பேருந்துகள் இயக்கப்படாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கமும் அறிவித்துள்ளது.
தடை செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் பயணிகள் யாரும் முன்பதிவு செய்ய வேண்டாம் என்றும் ஏற்கனவே பதிவு செய்திருப்பின் அதனை ரத்து செய்யும்படியும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.